search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் நீதிமன்றம்"

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. #LokSabhaElections2019 #VelloreConstituency
    சென்னை:

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.

    ‘பணப் பட்டுவாடா விவகாரத்தில் சில வேட்பாளரை மட்டும் எப்படி தகுதி நீக்க முடியும்? தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரைத் தான் தகுதி நீக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளர்களை மட்டுமே மக்கள் பிரதித்துவ சட்டப்படி தகுதிநீக்கம்  செய்ய முடியும்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.



    வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் பணப் பட்டுவாடா குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டால் தகுதிநீக்கம் செய்யப்படுவர் என்றும் கூறியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கூறினர். எனவே, வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்பது மாலை தெரிந்துவிடும்.  #LokSabhaElections2019 #VelloreConstituency
    கொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்த மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo
    நீலகிரி:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ‌சயான், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.

    ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. கொடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். 
     
    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று சயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.



    விசாரணைக்குப் பின்னர், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். மீண்டும் விசாரணைக்கு ஆஜரானபோது இருவருக்கும் ஜாமின் வழங்கியது.

    இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இதற்கிடையே, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்துசெய்ய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்ட நீதிமன்றம் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்தது. அத்துடன், உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo
    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducationDept
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.
     
    மாவட்ட தலைநகரங்களில் இன்றும் அரசு ஊழியர்கள் ஒன்றுதிரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் 25-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. 



    இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை ஏற்று பணிக்கு திரும்புவதா? அல்லது தொடர்ந்து போராட்டம் நடத்துவதா? என்பது குறித்து முடிவு செய்ய இன்று மதியம் ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள், தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் என தெரிவித்தனர். 

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 17 பி பிரிவின் கீழ் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது. #JactoGeo #Teachers #TNSchoolEducationDept
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு ஊழியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை ஐகோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. #JactoGeo #GovtStaff #HighCourt
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மறியலிலும் ஈடுபட்டனர்.
     
    சென்னை மாவட்டம் சார்பில் மாநகராட்சி வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். மாநகராட்சியின் பின்பகுதி வழியாக ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குவிந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.

    இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜனவரி 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மாணவர் கோகுல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. #JactoGeo #GovtStaff #HighCourt
    கொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ‌சயான், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. கொடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். 

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று சயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.



    விசாரணைக்குப் பின்னர், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். 18-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சயான், மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டபடி, பிணைத் தொகை செலுத்தவில்லை. எனவே, இன்று மாலைக்குள் பிணைத் தொகையை செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது. #KodanadEstate #KodanadVideo
    ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை கோரி அம்ருதா தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #Jayalalithaa #Amrutha #DNAtest
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது.



    1980 ஆகஸ்ட் 14-ம் தேதி அம்ருதா பிறந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயத்தில் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதா பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி வீடியோவில் அவர் கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.

    ஜெயலலிதாவின் சகோதரி என கூறப்படும் சைலஜா, அம்ருதாவை வளர்த்து வந்ததாக வழக்கில் வைக்கப்படும் வாதத்தில் உண்மையில்லை எனக் குறிப்பிட்ட அரசின் வழக்கறிஞர், தனது சகோதரரி ஜெயலலிதா எனக்கூறி வார இதழுக்கு பேட்டியளித்த சைலஜாவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவே அவதூறு வழக்கு தொடர்ந்ததற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

    இதற்கு பதிலளித்த அம்ருதா தரப்பு வழக்கறிஞர், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க அம்ருதாவுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், டி.என்.ஏ. சோதனை நடத்தினால் மட்டுமே தனது தரப்பு நியாயங்கள் உண்மை என்பது தெரிய வரும் என்றும் வாதிட்டார்.

    ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசின் வழக்கறிஞர், எந்த ஒரு ஆதாரங்களும் தாக்கல் செய்யாமல் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் மர்மமாகவே இருந்ததாக கருத்து தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த  நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கவும் டி.என்.ஏ. பரிசோதனை கோருவதற்கும் அம்ருதாவிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார். #Jayalalithaa #Amrutha #DNAtest 
    சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார். #ChennaiHighCourt #NewJudges
    சென்னை:

    சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 56 நீதிபதிகள் பணியில் இருந்து வருகின்றனர். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு குமாரி பி.டி.ஆஷா, நிர்மல்குமார், சுப்ரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கையெழுத்திட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இன்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட 7 நீதிபதிகளை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. #ChennaiHighCourt #NewJudges
    கொள்ளிடம் ஆற்றில் தொடங்கப்பட்ட புதிய மணல் குவாரிக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து திருமானூரில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு புதிய மணல் குவாரி தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கிய திருமானூர் ஒன்றியப்பகுதி மக்கள், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி தொடங்க கூடாது என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    ஆனாலும், பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே புதிய மணல் குவாரி கடந்த 4-ந் தேதி போலீசார் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. அன்றே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம், சாலை மறியல், சுடுகாட்டில் குடியேறுதல், கடையடைப்பு, கையெழுத்து இயக்கம், கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டுகளை கீழே போட்டும், கலெக்டரிடம் ஒப்படைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மேலும், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், கொள்ளிடம் ஆற்றில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும், எனவே மணல் குவாரியை அமைக்க தடைசெய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தொடங் கப்பட்ட மணல் குவாரிக்கு ஜூன் 5-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் திருமானூர் பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், ம.தி.மு.க. வாரணவாசி ராஜேந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல், கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழு பொறுப்பாளர்கள் தனபால், முத்துக்குமரன் உள்பட பலர் கொண்டனர். மேலும் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க நிரந்தர தடை உத்தரவு வரும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  
    ×